2024 ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். ஒரு புறம் ஜிகர் தவான் அதிரடியாக ஆட, மறுபுறம் ஜானி பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங், 25 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே, 45 ரன்கள் அடித்த ஷிகர் தவானு ஆட்டமிழந்தார்.
இதன் பின் ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா – சாம் கரண் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இதில், சாம் கரண் 23 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 176 ரன்கள் அடித்தது.
பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டு பிளஸ்சிஸ் களமிறங்கினர். டு பிளஸ்சிஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கிரீனும், மேக்ஸ்வெல்லும சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விராட் கோலி அதிரடியாக விளையாட, மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே இருந்தது. அசத்தலாக விளையாடி கொண்டிருந்த விராட் கோலி 77 ரன்களுக்கு அவுட்டானார்.
இருப்பினும், ஆட்டத்தின் கடைசிகட்டத்தில் தினேஷ் கார்த்திக், லோம்ரோரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில், பெங்களூரு அணி 19.2 ஓவரில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.