குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
குஜராத் மாநிலம் போர்பந்தரிலிருந்து, சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், பிரேம்சாகர் என்ற இந்திய மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நடுக்கடலில் படகு மூழ்க ஆரம்பித்தது. இதனை அடுத்து, படகில் இருந்தவர்கள் கடலில் குதித்தனர்.
இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், இந்தியக் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த C-161 என்ற எண் கொண்ட கப்பல் உடனடியாக மீட்புப் பணிக்கு சென்றது.
போர்பந்தரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த, 5 மீனவர்களையும், இந்தியக் கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், படகில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றினர். தொடர்ந்து, பாதியளவு மூழ்கியிருந்த படகை மீட்டு, கரைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், படகில் நீர் தேங்கி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், போர்பந்தரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் படகு கடலில் மூழ்கியது.
படகில் இருந்த 5 பேரும், போர்பந்தருக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, மீன்வள கூட்டமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.