மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரை மாா்ச் 28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பிரதமர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் அமைச்சர் ஹர்ஜோத் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்யக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “மதுபான ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்ப நினைக்கிறார்கள். சிறையில் இருந்து உத்தரவு வருவதாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்து கொண்டு நாடகம் ஆடுகிறார். ஊழல்வாதியான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடரக்கூடாது . அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.