ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் என்பவர், தமக்கு ரூ.648 கோடி சொத்துகள் இருப்பதாகவும், ஆனால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து பட்டியலை இணைத்து இருந்தார்.
அதில், அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சம் மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.57 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் உள்ளன. ஆக மொத்தம், ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான சொத்து இவரது பெயரில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல, அசோக்குமரின் மனைவிக்கு, ரூ.48 கோடி ரூபாய் அசையும் சொத்தும், ரூ.23 கோடி ரூபாய் அசையா சொத்தும் உள்ளன. ஆக மொத்தம், இருவருக்கும் சேர்த்து ரூ.648 கோடி சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
இதில், அசோக்குமாரிடம் 10 கிலோ தங்க நகையும், அவரது மனைவியிடம் 10 கிலோ தங்க நகையும் உள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால், இருவருக்கும் ஒரு கார் கூட இல்லை என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.