டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கானா எம்எல்சி கவிதாவை ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தெலங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழிலதிபர் குழுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த குழு மூலம் ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குழுவுக்கும் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அமலாக்கதுறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே கவிதாவின் ஜாமீன் ஏப்ரல் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வருகிறது.