மதிமுகவில் உள்ள கட்சி நிர்வாகிகளை, வைகோ மதிப்பதில்லை என அக்கட்சியின் முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ம.தி.மு.க. ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி அண்மையில் தற்கொலைக்கு முயன்றார். இதனால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரிடம் முக்கிய நிர்வாகிகள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கணேசமூர்த்தியின் மகன் கபிலனை சந்தித்து, ம.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி நலம் விசாரித்தார்.
பின்பு பேசிய அவர், மதிமுக அதன் ஆரம்பகால கொள்கையில் பயணிக்கவில்லை. கட்சி பாதை மாறி பயணிக்கிறது. ம.தி.மு.க-வில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. வைகோவும் மரியாதை கொடுப்பதில்லை.
தேர்தல் அறிவிப்பு துவங்கியது முதலே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என எதற்கும் கணேசமூர்த்தியை அழைக்கவில்லை. உயர்நிலை செயல்திட்ட குழு மற்றும் பொருளாளர் கணேசமூர்த்தி இல்லாமலே எல்லாம் நடந்துள்ளது. இதனால், அவர் மனம் உடைந்துவிட்டார்.
அவரிடம் வைகோ ஒரே ஒரு முறை பேசியிருந்தால், அவருக்கு இந்த நிலை வந்திருக்காது என்றார்.