ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் 4 ஆம் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்தத் தொடரின் 9 வது போட்டி நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இந்த போட்டியின் டெல்லி கேபிட்டல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் 4 ஆம் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதாவது இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் பவுல்ட், ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது.
அதைத் தொடர்ந்து பேட்டிங் இன்னிங்ஸ் முடித்ததும் வெஸ்ட் இண்டீஸின் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ட்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக பந்து வீசும் இன்னிங்க்ஸில் ராஜஸ்தான் பயன்படுத்தியது.
ஆனால் முதல் ஓவரில் 5 வது பந்தில் களத்தில் இருந்த இந்திய வீரர் சுபம் துபேவுக்கு பதிலாக மேற்கிந்திய அணி வீரர் ரோவ்மன் பவலை சப்ஸ்டிடியூட் வீரராக பீல்டிங் செய்ய வருமாறு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அழைத்தார்.
அதனால் அதிருப்தியடைந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இங்கே என்ன நடக்கிறது? என கேட்டு 4-வது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிளேயிங் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது மட்டும் எப்படி 4 வெளிநாட்டு வீரர்கள் பீல்டிங் செய்ய முடியும்? என்று பாண்டிங் கேள்வி எழுப்பினார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.
இதையடுத்து பாண்டிங் மற்றும் கங்குலியிடம் 4வது நடுவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் சஞ்சு சாம்சன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த மாற்றத்தை செய்துள்ளார் என கூறினார்.
ஐ.பி.எல். விதிமுறையின் படி பிளேயிங் லெவனில் நான்குக்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் வேறொரு வெளிநாட்டு வீரர் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருக்கும் எந்த வீரருக்கு பதிலாகவும் சப்ஸ்டியூட் வீரராக செயல்பட முடியும்.
எனவே அந்த விதிமுறைப்படி ராஜஸ்தான் அணி எந்த தவறும் செய்யவில்லை என்று 4வது நடுவர் விளக்கம் கொடுத்ததால் பாண்டிங் மற்றும் கங்குலி ஆகியோர் அமைதியானார்கள்.