திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், தமிழகத்தின் கடனை அதிகரித்திருப்பது மட்டும்தான் அவர்களின் சாதனையாக இருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் பொன் V. பாலகணபதியை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். திருவள்ளூரில் திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
மீண்டும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமர் பொறுப்பேற்கப் போகிறார் என்ற முடிவை நன்கு தெரிந்த தேர்தல் இது. இது நாட்டிற்கான தேர்தல். நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல். ஆனால், திமுக, மாநிலத் தேர்தல் போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
அதிமுக, உள்ளாட்சித் தேர்தல் போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தால், தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை, ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்து கேட்டுப் பெறலாம்.
இத்தனை ஆண்டு காலமாக, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, தங்கள் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த திமுக அதிமுகவுக்கு மாற்றாக, தொகுதியின் வளர்ச்சி குறித்துச் செயலாற்ற, நமக்கு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தேவை. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
நல்லாட்சியில், நமது நாடு உலக அரங்கில் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரத்தில் உலகில் ஐந்தாவது இடத்தை நாம் பிடித்திருக்கிறோம். தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், தமிழகத்தின் கடனை அதிகரித்திருப்பது மட்டும்தான் அவர்களின் சாதனையாக இருக்கிறது.
தமிழகத்தின் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மீது கடன் சுமையை ஏற்றியிருக்கிறார்கள். பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில், 76 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் பெண்கள். ஆனால், தமிழகத்தில் 2 பேர் தான் பெண்கள். பிரதமர் மோடி அமைச்சரவையில், 12 அமைச்சர்கள் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 27 அமைச்சர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், திமுகவில் 2 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திருமதி. திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதியாக அமர வைத்துள்ளோம். உண்மையான சமூகநீதி பாஜகவில் தான் இருக்கிறது.
ஆனால், திமுகவில் வெறும் பேச்சளவில்தான் சமூகநீதி இருக்கிறது. தமிழகத்தில் இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக, 2 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடனுதவி வழங்கியிருக்கிறார் நமது பிரதமர் மோடி அவர்கள். இந்தியாவிலேயே அதிகமாக நிதி பெற்ற மாநிலம் தமிழகம். ஆனால் ஸ்டாலின், 33 மாதங்களில், மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என, அனைத்து வரிகளையும் கடுமையாக உயர்த்தி, மக்கள் மீது விலைவாசி உயர்வைச் சுமத்தியுள்ளார்.
நமது பிரதமர் மோடி, 40 லட்சம் தாய்மார்களுக்கு, இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளார். தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு, கௌரவ நிதியாக, வருடத்திற்கு ரூ.6,000 என, 15 தவணைகளில், 30,000 ரூபாய் வழங்கியுள்ளார். ஆனால், ஸ்டாலின், தங்கள் நிலத்தைக் காப்பாற்றப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் உள்ளிட்ட 76 அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. ஆனால், தமிழகத்தில், ஒரு பொம்மை முதலமைச்சர் இருப்பதால், அவரது மகனும் மருமகனும், ஒரு ஆண்டில் ரூ.30,000 கோடி சம்பாதித்து விட்டார்கள் என்று, தமிழக அமைச்சர் ஒருவரே குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், 10.76 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், திமுகவுக்குப் பணம் வரவில்லை என்பதால், மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.
வரிப்பணத்தில், நேரடியாக 50% தமிழக அரசுக்குக் கிடைக்கிறது. அது தவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.4,413 கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 11 மருத்துவக் கல்லூரியில் ஒன்று திருவள்ளூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் ரயில் நிலையத்தை ரூ.28 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. பிரதமரின் வீடு திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 2,63,000 ரூபாய் மானியம் என 71,532 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1,91,890 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,11,124 வீடுகளில் இலவச எரிவாயு இணைப்பு, 14,621 பேருக்கு 5 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு, 72,851 விவசாயிகளுக்கு, வங்கிக் கணக்கில் 30,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
முத்ரா கடனுதவி, ரூபாய் 6,228 கோடி திருவள்ளூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக 33 மாதங்களில் செய்த ஒரு நலத்திட்டத்தை கூற முடியுமா? மக்கள் வரிப்பணத்தை, இலாகா இல்லாத அமைச்சருக்கு சம்பளமாகக் கொடுத்ததுதான் அவர்கள் செய்துள்ள நலத்திட்டம். வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் யார் என்பதே தெரியாத கூட்டணி, காங்கிரஸ், திமுக கூட்டணியான இண்டி கூட்டணி.
திருவள்ளூரின் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஐந்து ஆண்டுகளில் திருவள்ளூரைப் பின்னோக்கிக் கொண்டு சென்று விட்டார். திருவள்ளூர் பெரும் வளர்ச்சி பெற, திருவள்ளூரின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க, அடுத்த இருபது நாட்கள் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். பொன் V. பாலகணபதிக்குத் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம். திருவள்ளூரை முன்னேற்றுவோம் எனத் தெரிவித்தார்.