காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டிலின் மருமகள் அர்ச்சனா பாட்டில் சகுர்கர் பாஜகவில் இணைந்துள்ளார்.
மக்களவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டிலின் மருமகள் அர்ச்சனா பாட்டில் சகுர்கர், மகாராஷ்டிரா துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
மகாராஷ்டிராவின் உட்கிர் பகுதியில் இயங்கி வரும் லைஃப்கேர் மருத்துவமனையின் தலைவரான அர்ச்சனா பாட்டில் சகுர்கரின் கணவர் ஷைலேஷ் பாட்டில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செயலாளராக உள்ளார்.
அர்ச்சானா பாஜகவில் இணைந்ததை அடுத்துப் பேசிய தேவேந்திர பட்னவிஸ்,
“காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மக்களவை சபாநாயகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவ்ராஜ் பாட்டிலின் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா பாட்டில் பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகப் பெரிய விஷயம். இது கட்சியை மேலும் பலப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா பாட்டில் சகுர்கர்,
“அரசியலிலில் இணைந்து சேவை செய்வதற்காகவே பாஜகவில் இணைந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் என்னை பெரிதும் கவர்ந்தது. இது பெண்களுக்கு சம வாய்ப்பை அளிக்கிறது.
மகாராஷ்டிராவின் லத்தூரில் அடிமட்ட அளவில் நான் பணியாற்றி இருக்கிறேன். மேலும் பாஜகவுடன் இணைந்து அடிமட்ட அளவில் பணியாற்றுவேன். நான் அதிகாரபூர்வமாக காங்கிரஸில் இருந்ததில்லை. பாஜகவின் சித்தாந்தம் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அதில் சேர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.