தி.மு.க. எம்.பி ஆ.ராசாவின் காரை முறையாகச் சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார்.
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊட்டிக்கு வந்த ஆ.ராசா, பின்னர் அங்கிருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் சென்றார். அவருடன் திமுக அமைச்சர் ராமச்சந்திரன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் முபாரக் ஆகியோர் உடன் சென்றனர்.
அப்போது, குஞ்சப்பனை சோதனைச் சாவடி அருகே, ஆ.ராசாவின் காரை தேர்தல் பறக்கும் அலுவலர் கீதா தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர், அந்த காரை அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், ஆ.ராசா சென்ற காரில் ஏராளமான பெட்டிகள் இருந்தது. அதனை முழுமையாகச் சோதனை செய்யாமல், ஒரு சில நிமிடங்களில் சோதனையை நிறைவு செய்து அனுப்பி உள்ளதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் விசாரணை நடந்தது. இதனைத் தொடர்ந்து, ஆ.ராசா காரை முறையாக சோதனை செய்யாத தேர்தல் அலுவலர் கீதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.