2024 ஐபிஎல் தொடரின் 12-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன் எடுத்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இன்றைய முதல் போட்டி அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற சன் ரைசஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன் ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்துள்ளது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 5 வது ஓவரில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 7 வது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் மொத்தமாக 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஹென்ரிச் கிளாசென் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது சன் ரைசஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஷாபாஸ் அகமது மற்றும் அப்துல் சமத் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இறுதியாக ஷாபாஸ் அகமது 22 ரன்களும், அப்துல் சமத் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியின் தொடக்கத்தில் அட்டகாசமாக விளையாடிய சன் ரைசஸ் ஐதராபாத் அணி முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், அஸ்மத்துல்லா ஒமர்சாய், உமேஷ் யாதவ், நூர் அகமது, ரஷித் கான்ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.