தமிழகத்தில் 30 தொகுதிகளில், 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால், அந்த தொகுதிகளில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையமும், மாநிலத் தேர்தல்கள் ஆணையங்களும் தீவிரமாக செய்து வருகின்றன.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெறும்.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிகபட்சமாக 15 வேட்பாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால், கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
அந்த வகையில், தமிழகத்தில் 30 தொகுதிகளில், 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, இந்த தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.