அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி 30 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, அதை ஒட்டி அமைந்துள்ள நம் அண்டை நாடான சீனா, பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை பலமுறை நிராகரித்துள்ள மத்திய அரசு, அது நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என வலியுறுத்தி வருகிறது.
சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையான, சேலா சுரங்கப் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் சீனியர் கலோனல் ஜாங் ஜியோங், அருணாச்சல பிரதேசம் தங்களுக்கே சொந்தமானது என மீண்டும் உரிமை கோரினார். அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அங்கீகரிப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அருணாச்சல் பிரதேச மாநிலத்தை உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் உள்ள 12 மலைகள், 4 நதிகள், ஒரு நிலப்பகுதி உள்ளிட்ட மேலும் 30 இடங்களுக்கு இன்று சீன சிவில் விவகார அமைச்சகம் பெயரிட்டுள்ளது. அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சலத்தை சீனா உரிமை கொண்டாடவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
அருணாச்சலில் 2017இல் 6 இடங்களுக்கும், 2021இல் 15 இடங்களுக்கும், 2023இல் 11 இடங்களுக்கும் சீனா பெயரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.