கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே என்ற ஹோட்டலில் மார்ச் 1 -ம் தேதி திடீரென குண்டு வெடித்தது.
இது தொடர்பாக, அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு என்ஐஏ வசம் சென்றது.
என்ஐஏ தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியது. இதனிடையே, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும், முஸவீர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் அகமத் தாஹா ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வலை வீசி தேடி வந்தனர்.
மேலும், இவர்கள் குறித்து துப்பு கொடுத்தால், தலா 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும், தேசிய புலனாய்வு முகமை அறிவித்தது.
இதற்கிடையே, முஸம்மில் ஷெரீப் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குண்டு வெடிப்புக்கு முன்னரும், பின்னரும், முஸவீர் ஹுசைன், அப்துல் மதீன் அகமத் தாஹா ஆகியோர், சென்னை சென்று வந்துள்ளதும், அவர்கள் திருவல்லிக்கேணி மற்றும் சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் பல பொருட்கள் வாங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த கடையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், குண்டு வெடிப்பு குற்றவாளிகள் அந்த இடத்தில் சுமார் 40 நிமிடம் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கும் சென்று, பொருட்கள் வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால், மேலும் விசாரணையை தீவிரப்படுத்த, என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் தொடர் முகாமிட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.