தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து, இந்திய வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பணியாற்றி வருகின்றனர்.
நாளை, அதாவது ஏப்ரல் 2-ம் தேதி அன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், தலைமைச் செயலகத்தில் சுங்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சி -விஜில் செயலி மூலம் 1,822 புகார்கள் வந்தன. அதில், 1,803 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை 109.76 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.