நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில், நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
இதனையடுத்து இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான, ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 48.2 ஓவர்களில், 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 50 ரன்கள் எடுத்தார்.
208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர்,களமிறங்கிய எமி ஜோன்ஸ் மற்றும் சார்லோட் டீன் இருவரும் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மெல்ல மீட்டனர். தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய இருவரும், அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
இறுதியில், 41.2 ஓவர்களில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நியூசிலாந்து அணியை இங்கிலாந்து வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய எமி ஜோன்ஸ் 92 ரன்கள் சேர்த்தார்.