உகாதி திருவிழாவையொட்டி, புகழ் பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வைணவத்தளங்களில் மிகவும் புகழ் பெற்றது திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில். 108 திவ்விய தேசங்களில் மிகவும் புகழ் வாய்ந்தது.
திருப்பதிக்கு தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருமலை திருப்பதியில் வரும் 9-ம் தேதி உகாதி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அதிகாலை 3 மணிக்கு சுப்பரபாத சேவை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, காலை 7 மணி முதல் 9 மணி வரை விமான பிரகாரம் மற்றும் கொடி மரத்தைச் சுற்றி சுவாமி உலா வந்து கோவிலுக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.
இதனிடையே, உகாதி பண்டியையொட்டி, ஏப்ரல் 9-ம் தேதி அன்று, ஆர்ஜித சேவை மற்றும் ஊஞ்சல் சேவை உள்ளிட்டவைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இரத்து செய்துள்ளது.