வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்கம் (WBWA) ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் கி. சிவநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இந்துக்களை பல வழிகளில் பிரித்து, அவர்களின் சமூக கட்டமைப்பை, கடவுள்களை தவறாக சித்தரித்து, மக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி, புராணங்களை தவறாக பேசி, அவற்றை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் செயல்படும் திமுக மற்றும் அவற்றின் தோழமை கட்சிகள் செயல்பட்டுக்கொண்டு வந்துள்ளன.
அதே போல வேண்டுமென்றே பல விதங்களில் பலரை தூண்டி விட்டு, பல வழிகளில் தமிழ்நாட்டில் இருக்கும் பிராமணர்களின் நம்பிக்கையை, நேர்மையை கேள்விக்குள்ளாக்கி, அவர்களின் வாழ்வியலை கொச்சைப்படுத்தி, அதில் களிப்படைந்து கொண்டுள்ளனர்.
மேலும், மற்ற அரசியல் கட்சிகளிடம் கொள்கை அளவில் பிராமணர்களை ஆதரிக்க தேவையான வாக்குறுதிகள் மற்றும் அறிக்கைகள் உறுதியாக காணப்படவில்லை எனவே ஒரு மாற்று அரசியலை தமிழ்நாடு சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்துக்களை சிந்திக்க தூண்டும். மக்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தும். பிராமணர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் அரசியல் சக்தியாக பாஜக கட்சி இப்போது உள்ளது. இன்றைய அளவில் பிராமணர்களை வெளிப்படையாக நடுநிலையோடு ஆதரித்து அவர்களை இந்துக்களில் ஒரு அங்கமாக பாவித்து, மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும் தவறான கருத்தியலை மாற்றி சம நிலையை உருவாக்க பாடுபடும் ஒரே கட்சி ‘பாஜக தான்.
வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளுடன் களம் காண செய்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. போற்றத்தக்கது. மற்றும் அபரிமிதமானது. தமிழ்நாட்டில் நிலையான வெளிப்படையான, ஊழலற்ற அரசியலமைப்பு ஏற்பட, தமிழர் மற்றும் பிராமணர் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க தகுதி உள்ள ஒரே கட்சி பாஜக தான்.
இந்த தேர்தலில் உலக ப்ராமணர்கள் நல்வாழ்வு சங்கம் (WBWA) உறுப்பினர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க தன் முழு ஆதரவை பாஜகவுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. பாஜக தேவையான இலக்கை அடைய எங்களாலான பணிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக்
கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.