சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரத்தில், புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2003 -ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக அமைச்சர் உதயநிதி, மலேரியோ, டெங்கு அழிப்பதைப் போல, சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என பேசினார்.
அவரது பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் உதயநிதி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், உதயநிதி மீது ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபலமானவர்கள் பொது வெளியில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேசவேண்டும் என உதயநிதிக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
முன்னதாக, பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் வழக்குகளை மேற்கொள்காட்டி உதயநிதி தரப்பு வாதிட்டனர். ஆனால், அவர்கள் பத்திரிக்கையாளர்கள். நீங்கள் அரசியல்வாதி. எனவே, அந்த சூழ்நிலை உங்களுக்கு பொருந்தாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், உதயநிதி தாக்கல் செய்த ரிட் மனுவுக்குப் பதில், புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.