1974ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்க்க கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒப்புதல் தான் காரணம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கும் முக்கியப் பங்கு உள்ளது” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களைக் காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை அவிநாசி சாலை சிட்ரா பகுதி அருகே கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களைக் செய்தியாளர்களிடம் காட்டினார்.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சகோதரர்கள், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், கைது செய்யப்படும்போதும், அவர்கள் படகுகள் உடைக்கப்படுவதும், பறிமுதல் செய்யப்படுவதும், காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் தொடர்கதை ஆகியிருந்த போது, அதன் முழுக் காரணம், 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்க்க கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒப்புதல் எனத் தெரிவித்தார்.
“டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரம் குறித்த விரிவான தகவல்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதுவரை கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவினர் பொய்யான தகவல்களையே கூறியுள்ளனர்.
தங்களுக்கு தெரியாமலே கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாகவும், இதைக் கண்டித்து கண்டனப் போராட்டங்கள் நடத்தியதாகவும், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் தமிழக மக்களை திமுகவினர் ஏமாற்றியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. கச்சத்தீவை தாரைவார்த்த விவகாரத்தில் இதுவரை காங்கிரஸ் கட்சியை மட்டுமே திமுக குறை கூறிவந்துள்ளது. இதில் திமுகவுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.
இச்சம்பவத்தின்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிந்தே தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் மற்றும் திமுக, பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் மற்ற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கப்படவில்லை. 1974-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும், வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து பேசிய குறிப்புகள் வெளிவந்துள்ளன.
ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்தக் குறிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கச்சத்தீவை கொடுப்பது குறித்து பேசலாம். இப்போது வேண்டாம் என கருணாநிதி கேட்டுள்ளார். பின் கச்சத்தீவை இலங்கையிடம் வழங்குவதற்கு கருணாநிதி சம்மதம் தெரிவித்ததோடு சிறிய அளவு போராட்டங்கள் செய்வதாகவும் கூறி 21 முறை கடிதம் எழுதி நாடகமாடியுள்ளார்.
கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், வெளியுறவத் துறை அமைச்சகமும் ஆராய்ந்து வருகின்றன. பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
‘முத்ரா’ கடனுதவி தொழில்முனைவோருக்கு அதிகளவு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சிறந்த பலன் பெற்றுள்ளது. போக்குவரத்து நெருக்கடி காரணமாக கோவை – பெங்களூரு இரவு நேர ரயில் உள்ளிட்டவை வழங்க முடியவில்லை. கோவை – துபாய் இடையே விமான சேவை தொடங்கவும் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. கோவை மக்கள் மத்தியில் பாஜகவுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளதை பிரச்சாரத்தில் காண முடிகிறது” என்றார்