போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் அமீர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்தியாவில் இருந்து போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மேற்கு டெல்லி கைலாஷ் பார்க்கில் உள்ள கிடங்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுமார் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கும்பலின் தலைவனும், திமுக அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி அவனை போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இயக்குநர் அமீர் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.