கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும், கிரிக்கெட்டுக்கும் இந்தியாவுக்கும் என்றும் நீங்காத பந்தம் இருந்துக் கொண்டே இருக்குறது.
குடியரசு தினம், சுதந்திரம் தினம் மட்டும் இல்லாமல் இந்தியா ஒவ்வொரு முறை கிரிக்கெட் விளையாடும் போதும் நம் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகிறோம்.
இந்தியா வெற்றி பெற்றால் ஆனந்த கண்ணீர், இந்தியா தோல்வியடைந்தால் சோகக் கண்ணீர் என ஆண்களையும் கண்ணீர் சிந்தவைக்க கிரிக்கெட்டால் மட்டுமே முடியும்.
இப்படி ஒவ்வொருவரின் உணர்ச்சியிலும் கலந்த இந்த விளையாட்டில் இந்தியர்களால் மறக்கவே முடியாத ஒரு நாள் தான் இன்று ஏப்ரல், 2, 2011.
பல போராட்டங்கள், பல அவமானங்களுக்கு பிறகு 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை நமக்கு வென்று கொடுத்தது.
அதை தொடர்ந்து அடுத்த உலகக்கோப்பையை எப்போது வெல்வோம் என்று ஏங்கிக்கொண்டிருந்த இந்தியர்களுக்கு மத்தியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையை 28 வருடங்களுக்கு பிறகு நம் பாரதத்திற்கு வென்று கொடுத்த நாள் தான் இன்று.
10- வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்றது. இத்தொடரில் 14 அணிகள் பங்குபெற்றது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மொத்தமாக 49 போட்டிகள் நடைபெற்றது.
இத்தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் விளையாடியது, இதில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவுடன், இலங்கை அணி ஏப்ரல் 2 ஆம் தேதி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 274 ரன்களை எடுத்தது.
வான்கடே மைதானத்தில் 274 ரன்களை சேஸ் செய்வது கடினமான இலக்காகவே இருந்தது. இலங்கை அணியின் ஆக்ரேஷமான பந்துவீச்சுக்கு இந்தியா ஈடுகொடுக்க முடியுமா என்ற பதற்றமும் ரசிகர்கள் மத்தியில்இருந்தது. நினைத்தது போலவே இலங்கை ஆரம்பமே தனது அட்டாக்கிங் பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா பந்துவீச்சில் சேவாக் டக் அவுட்டாகி வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்தினார். அதற்கு அடுத்த சில பந்துகளில் சச்சின் டெண்டுல்கரையும் பெவிலியன் அனுப்பினார் மலிங்கா.
இளம்நாயகனாக களமிறங்கிய விராட் கோலி, கவுதம் கம்பீர் உடன் நிதானமாக விளையாடி அணியை காப்பாற்றினார். இந்த ஜோடி 83 ரன்கள் குவித்த நிலையில் தில்சன் பந்துவீச்சில் வெளியேறேினார் விராட்.
விராட் அவுட்டானதும் அடுத்து எப்போதும் யுவராஜ் சிங் களமிறங்கும் வரிசையில் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக கேப்டன் மகேந்திர சிங் தோனி இறங்கினார். தோனி – கம்பீர் இலங்கை பந்துவீச்சை சிதறவிட்டனர்.
சதம் நெருங்கிய கவுதம் கம்பீர் 97 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மகேந்திர சிங் தோனி 91 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
வான்கடே மைதானத்தில் 49 வது ஓவரில் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த காட்சிகள் இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இருக்கும்.
அன்றைய நாள், கிரிக்கெட் பிடிக்காதவர்கள் கூட நம் பாரதத்திற்காக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அன்று இந்தியாவே திருவிழாவாக மாறியது. இந்த நாள் இன்று மட்டுமின்றி காலம் கடந்தும் பேசப்படும்.