“கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
“கச்சத்தீவு விவகாரத்தை நாங்கள் இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு கச்சத்தீவு மீட்க வேண்டும் என்பதே. இந்தியாவிடம் இல்லாத நிலப்பரப்பு இல்லை. எனினும், கச்சத்தீவு எதற்காக வேண்டும் என்றால், கச்சத்தீவு இருந்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்.
3 முறை இலங்கை சென்றுள்ளேன். தனிப்பட்ட முறையில் இலங்கை அதிகாரிகள், அரசியல் கட்சிகளை சந்தித்து பேசியுள்ளேன். இந்த சந்திப்புக்கு பிறகு கச்சத்தீவு பிரச்சினையில் தீர்வு கிடைக்க சில முடிவுகளுக்கு வந்துள்ளோம்.
மூன்று வாய்ப்புகளையும் யோசித்துள்ளோம். அது, கச்சத்தீவில் தினமும் பத்தாயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க லைசென்ஸ் பெறுவது அல்லது கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறுவது அல்லது கச்சத்தீவை திரும்ப கேட்பது என்பதே அது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளோம். இதற்கு முன் கச்சத்தீவை பற்றி யார் பேசினார்கள். நாங்கள் தான் பேசுகிறோம். பாஜக முறைப்படி கச்சத்தீவு விவகாரத்தை கையாண்டு வருகிறது.
சீமான் போல் நெய்தல் படையை அனுப்புவோம் என்று பேசவில்லை. நாங்கள் முறைப்படி தீர்வை நோக்கி பேசுகிறோம். நான் ஆர்டிஐ பெற்றதற்காக என் மேல் கோபம் ஏன் வருகிறது.
இந்த 50 வருடத்தில் வேறு எந்த அரசியல்வாதியும் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருக்கலாமே, ஏன் பெறவில்லை.
கச்சத்தீவு விவகாரத்தில் வெளியிட்ட ஆர்டிஐ ஆவணம் பச்சை பொய் என்று சொல்பவர்கள் என்னுடன் விவாதிக்க தயாரா?. போலி என்றால் ஆர்டிஐ ஆவணங்களை நாங்கள் உருவாக்கினோமா. கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் பதில் தான் வேடிக்கையாக உள்ளது. கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இதைப்பற்றி இப்போது பேச ஆரம்பித்துள்ளார். எல்லாவிதமான தீர்வுகளுக்கும் முயற்சி எடுக்கிறோம் என்றுள்ளார் அவர். எனவே இந்த விவகாரத்தில் நிச்சயமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கண்டிப்பாக மதுகடைகள் மூடப்படும், கள்ளு கடைகள் திறக்க நடக்கவடிக்கை எடுக்கப்படும், இதன் மூலம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இது தொடர்பாக 317 பக்க அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
சீமானுக்கு சின்னம் இல்லை, ஓட்டும் இல்லை எனத் தெரிவித்தார். சுப்பிரமணிய சுவாமி குறித்து தமிழக மக்களுக்கு தெரியும். கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெரும் என்றும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் எனத் தெரிவித்தார்.