உலகக் கோப்பை பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான, 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 184 கிலோ எடையை தூக்கி 3-வது இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தாய்லாந்து, புக்கட் நகரில் சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு சார்பில், உலகக் கோப்பை பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவருகிறது.
இந்த தொடரானது இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாகவும் அமைந்துள்ளது. இந்த தொடரின் பெண்களுக்கான 49 கிலோ எடை பிரிவுக்கான போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பங்குபெற்றார். இவர் ஸ்னாட்ச் முறையில் 81 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 103 கிலோ என்று மொத்தமாக 184 கிலோ எடை தூக்கி ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்தார்.
இதன் மூலம் இவர் 49 கிலோ பிரிவு தகுதி சுற்றுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தது 2 தகுதி சுற்றிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
இதை இந்திய வீராங்கனை மீராபாய் சானு நிறைவு செய்துவிட்டார். பளுதூக்குதல் தகுதி சுற்று ஏப்ரல் 28 ஆம் தேதி முடிவடைகிறது. அப்போது ஒவ்வொரு எடைப் பிரிவிலும் தரவரிசையில் டாப்-10 இடத்திற்குள் இருப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதன் மூலம் மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.