இரண்டு போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்திய லக்னோ அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் தான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே இலக்கு என்று கூறியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.
இந்த தொடரின் 15வது போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும் பெற்றார். மேலும் 2 ஐபிஎல் போட்டிகளில் 157 கிமீ வேகத்தில் பந்து வீசியதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் மயங்க் யாதவ்.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் பேசியர் அவர் 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதை விடவும், லக்னோ அணியின் வெற்றிக்கு பங்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.
இதுகுறித்து அவர், ” பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்தது மனதளவில் சந்தோஷமாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான் இலக்கு.
அதற்கான தொடக்கம் தான் இது. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை கேமரூன் க்ரீனின் விக்கெட்டை ரசித்தேன். அதேபோல் காயமடையாமல் இருப்பதற்கு, எனது உடலை சரியாக பராமரிக்கிறேன்.
டயட்டை ஃபாலோ செய்வதோடு, பயிற்சி மற்றும் தூக்கத்தை சரியாக பின் தொடர்கிறேன். எப்போதும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் காயத்தில் இருந்து மீண்டு வர நேரம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் ஐஸ் குளியல் போடுவது அடுத்த சவாலுக்கு தயாராக உதவியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.