கள்ளழகர் திருவிழாவில் உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதன் பிறகு, வரும் ஏப்ரல் 22இல் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்வும், அதனை தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23இல் நடைபெற இருக்கிறது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது பலரும், ஆற்றங்கரை ஓரம் இருந்து வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடிப்பது வழக்கம். அப்போது சில சமயங்களில் உயர் அழுத்தம் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் அழகர் சிலை மற்றும் ஆபரணங்களுக்கு சேதம் ஏற்படும் எனவும், மேலும் பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் மக்கள் சிரமப்படுவார்கள் என மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, உயர் அழுத்தம் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மோட்டருக்கு பதிலாக பரம்பரிய முறைப்படி தோல் பைகள் கொண்டு மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்றும். அதுவும், தண்ணீர் தெளிக்க விரதம் இருப்போர் முன்பாகவே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், ஆற்றங்கரை பகுதியில் இருந்து மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் எனவும் பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது. விதிகளை முறையாக பின்பற்றும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும். உத்தரவை வரும் காலங்களிலும் முறையாக பின்பற்ற வேண்டும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.