பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை ஷைனி வில்சன் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்த ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டு காலத்திற்கு ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார்.
இந்த நியமனத்திற்கான ஆசிய விளையாட்டு ஆணையத்தின் கூட்டம் நேற்று இணைய வழியாக நடைபெற்றது.
இதில் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான முகமத் சுலைமான் தலைமையில் நடைபெற்றது.
அதில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆணைய உறுப்பினர்களில் ஒருவராக ஷைனி வில்சன் நியமிக்கப்பட்டார்.
மேலும் ஆசியாவில் விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுக்கள் சங்கத்தின் தலைவர் ஜெனரல் தஹலான், விளையாட்டு சங்கத்தின் போட்டி இயக்குநர் சி கே வல்சன், ஆசிய விளையாட்டுகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ சுகுமாறன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஷைனி வில்சன், நான்கு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்.
இவர் 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4×400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1986 ஆம் ஆண்டு சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4×400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
இதேபோல், ஆசிய சாம்பியன் போட்டிகள், தெற்காசிய ஃபெடரேஷன் போட்டிகள் ஆகியவற்றில் பல ஆண்டுகள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இவர் மத்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.