தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி. 1974 ஆம் ஆண்டு இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1976ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனித்தார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
மத்திய புலனாய்வுத்துறை,Intelligence Bureau, உளவுத்துறை சிறப்பு இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை திறம்பட கையாண்டவர் ஆர்.என்.ரவி. 2012ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தை மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2019ஆம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு பிறகு அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.