பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகின் வலிமையான தலைவராக இருக்கிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து அம்மாபேட்டையில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
மத்தியில், மீண்டும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமர் பதவி ஏற்க போகிறார் என்ற முடிவு நன்கு தெரிந்த தேர்தல் இது. இது நாட்டிற்கான தேர்தல். நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல். ஆனால், திமுக, மாநிலத் தேர்தல் போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
அதிமுக, உள்ளாட்சித் தேர்தல் போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தால், தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை, ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்து கேட்டுப் பெறலாம்.
இத்தனை ஆண்டு காலமாக, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, தங்கள் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த திமுக அதிமுகவுக்கு மாற்றாக, தொகுதியின் வளர்ச்சி குறித்துச் செயலாற்ற, நமக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவை.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், உலக அரங்கில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது.
மொழி, இனப் பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்கிறது திமுக. மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்ட திமுக வாரிசுகள் அனைவரும் பதவியில் இருந்து வருகிறார்கள். இதுதான் இவர்கள் உணர்வுக்குக் கொடுக்கும் மரியாதை.
முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 33 மாதங்களில், மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடி நீர் வரி உயர்வு என, அனைத்து வரிகளையும் கடுமையாக உயர்த்தி, மக்கள் மீது விலைவாசி உயர்வைச் சுமத்தியுள்ளார். தங்கள் நிலத்தைக் காப்பாற்றப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் உள்ளிட்ட 76 அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. ஆனால், திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.
அராஜகமும், ரவுடித்தனமும் இணைந்த கூட்டணிதான் திமுக. முதலமைச்சர் மகனும் மருமகனும், ஒரு ஆண்டில் 30,000 கோடி சம்பாதித்து விட்டார்கள் என்று, தமிழக அமைச்சர் ஒருவரே குற்றம் சாட்டியிருந்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் யார் என்பதே தெரியாத கூட்டணி, காங்கிரஸ், திமுக கூட்டணியான இந்தி கூட்டணி. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகின் வலிமையான தலைவராக இருக்கிறார்.
அவரது அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியைப் பயன்படுத்தி, சேலம் தொகுதி பெரும் வளர்ச்சி பெற, சேலம் மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க, அடுத்த இரண்டு வாரங்கள் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
அண்ணாதுரைக்கு, பாட்டாளிகளின் சின்னம், நமது மருத்துவர் ஐயாவின் சின்னம், நமது பாரதப் பிரதமரின் ஆசி பெற்ற சின்னம், சேலத்தின் சின்னமாம் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். சேலத்தை முன்னேற்றுவோம் எனத் தெரிவித்தார்.