கஜகஸ்தான் சேலஞ்ச் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப்.
கஜகஸ்தான் நாட்டிலுள்ள உரால்ஸ்க் நகரில் கஜகஸ்தான் சர்வதேச சேலஞ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
2015 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த இந்த பேட்மிண்டன் தொடரில் தற்போது ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியா நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நடைபெற்றது. அதில் 17 வயதாகும் இளம் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப் பங்குபெற்றார்.
இவர் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நுரானி ரது அஸ்ஸாஹ்ரா என்பவரை எதிர்கொண்டார். இதன் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை 21 புள்ளிகளை பெற்று 21-11 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப் 21 புள்ளிகளை பெற்று 21-7 என்கிற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் அனுபமா உபத்யயா 18-21, 21-14, 21-14 என செக்குடியரசின் தெரேசா ஸ்வாபிகோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல் இந்தியாவின் தன்யா ஹேம்நாத் 21-11, 21-18 என இஸ்ரேலின் கேசேனியா பொலிகார்போவாவை தோற்கடித்தார்.
மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் தேவிகா சிஹாக், இஷாராணி பருவா வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி 24-22, 18-21, 13-21 என சகவீரர் தருணிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் ரவி, பாரத் ராகவ் வெற்றி பெற்றனர். அதேபோல் கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, சஞ்சய் ஸ்ரீவஸ்தா-மணீஷா ஜோடிகள் வெற்றி பெற்றன.