தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக, நாடு முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 939 புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், இவற்றில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 551 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதை புகைப்படமாகவோ அல்லது வீடியோவாக எடுத்து சி-விஜில் என்ற செல்போன் செயலி மூலம், தேர்தல் ஆணையத்துக்கு பொது மக்கள் அனுப்பலாம். இவ்வாறு அனுப்பப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்படும்.
அந்தவகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த 3-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட புகார்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் அதிகபட்சமாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 939 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 551 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 481 புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டது. 388 புகார்கள் விசாரணையில் உள்ளன.
இவற்றில் அதிகபட்சமாக கேரளாவில் 71 ஆயிரத்து 168 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 70 ஆயிரத்து 929 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக மேகாலயாவில் 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லடாக், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஒரு எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.