தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் பயணம் குறித்து, அண்ணாமலை எனும் திருப்புமுனை நூல் வெளியிட்டு விழா கோவையில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கோவை உப்பிபாலியம் ஸ்ரீசாய் விவாஹா மகாலில் ஏப்ரல் 6-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுவதாக இருந்தது.
இந்த விழாவில், பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஸ்மார்ட் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த நிலையில், இந்த விழாவுக்கு கோவை போலீசார் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விழாவுக்கு அனுமதி மறுத்துள்ளார்.
இதனையடுத்து, விழாவுக்கு அனுமதி அளிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடவேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விழாக்குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விழாவுக்கு தடை போடுவது திட்டமிட்ட செயல், இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.