மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள மணிஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்தபோது மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
மதுபானக் கொள்கை வழக்கில் மனீஷ் சிசோடியா பிப்ரவரி 26, 2023 அன்று மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டார். மார்ச் 9, 2023 அன்று சிபிஐ எப்ஐஆரில் இருந்து பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத் துறை கைது செய்தது. பிப்ரவரி 28, 2023 அன்று டெல்லி அமைச்சரவையில் இருந்து சிசோடியா ராஜினாமா செய்தார்.
தில்லி கலால் வரிக் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் நடந்ததாகவும், உரிமம் வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், உரிமக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், தகுதியான அதிகாரியின் அனுமதியின்றி உரிமங்கள் நீட்டிக்கப்பட்டதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
இன்றுடன் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.