பெண்களுக்கான தேசிய அளவிலான 33-வது சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகம் அணியின் கேப்டன் கார்த்திகாவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது.
பீகார் மாநிலத்தில் மகளிருக்கான தேசிய அளவிலான 33-வது சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த தொடர் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் தமிழகம் அணியும் பங்கேற்றது. தமிழ்நாடு அணிக்கு சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா கேப்டனாக செயல்பட்டார். இவர் ஏற்கனவே முதல்வர் கோப்பை, ப்ரோ கபடி லீக் போன்ற தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.
இந்த தொடரில் தமிழகம் அணி காலிறுதி சுற்றில் உத்தரகாண்ட் அணியிடம் 22-16 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
இதன்பின் முதல் பரிசை ஹரியானா அணி 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதேபோல் வெண்கலப் பதக்கத்தை கோவா மற்றும் உத்தரகாண்ட் அணிகள் வென்றன.
இந்நிலையில் இந்த கபடி தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டன் கார்த்திகாவின் ரெய்டு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் கார்த்திகா தனியாளாக மிரட்டலான ரெய்டு பாய்ண்ட்களை பெற்றுள்ளார்.
அதேபோல் பீகார் அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்கள் தவறான தீர்ப்பை அளித்த போது, நேரடியாக அவர்களிடமே கேப்டனாக நின்று போராடியுள்ளார்.
அதன்பின் பீகார் அணியை 33-32 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்துவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளார் கார்த்திகா. இதனால் கபடி ரசிகர்கள் பலரும் கார்த்திகாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.