பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்தனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் வாகன பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்தனர். பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து வாகன பேரணிக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் பாஜக தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகன பேரணி நடத்தவுள்ள இடம் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதி என்றும் அது வாகன நெரிசல் மிக்க பகுதி என்றும் கூறினார்.
மேலும், காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த அனுமதிக்க முடியாது. கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் வாகன பேரணி நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாற்றுப்பாதையில் கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் 4 மணி முதல் 6 மணி வரை வாகன பேரணி நடத்த உத்தரவிட்டனர்.