வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டிய, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் தொடக்கவிழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் ஜனம் தொலைக்காட்சி தொடக்க விழா, மங்கள வாத்தியம் முழங்க, மலர் மாலைகள் மணம்வீச, சென்னை தி.நகரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் ஏப்ரல் 8-ம் தேதி காலையில் கோலாகலமாக நடைபெற்றது.
தொடக்க விழாவையொட்டி, விழா அரங்கில் ஆர்.எஸ்எஸ். நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினும் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அப்போது, விழாவுக்கு வருகை தந்த அனைவரையும், தமிழ் ஜனம் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.ரமேஷ் பிரபா அன்புடன் வரவேற்றார்.
அப்போது பேசிய அவர், நடுநிலை என்பது கெட்ட வார்த்தை. மாறாக, தமிழ் ஜனம் டிவி, நீதியின் பக்கம் நிற்கும், நியாத்தின் பக்கம் நிற்கும். நேர்மறையான செய்திகளை அதிக அளவில் கொடுக்கும். வருங்கால இளைஞர்களுக்கு தேசிய சிந்தனை தேவை. அதை தமிழ் ஜனம் டிவி நிறைவேற்றும் என்றார்.
தமிழ் ஜனம் டிவியின் நிர்வாக இயக்குநர் திரு. மது பேசுகையில், உள்ளதை உள்ளபடியே கொடுப்போம். தமிழ் ஜனம் டிவி, தேசிய சிந்தனையோடு செயல்படும். இதில், தனிமனித தாக்குதல் இருக்காது. அதேபோல, தனிமனித துதிபாடுதலும் இருக்காது. தேச நலனையும், மக்கள் நலனையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் என்று உறுதியளித்தார்.
தொடக்க விழாவில், மத்திய தகவல் மற்றம் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். விழாவில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், சகோத சகோதரிகளை எனத் தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கினார். தமிழ் ஜனம் டிவி இந்திய அரங்கில் வெற்றி பெற வாழ்த்துகள். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் கால்நடை மற்றும் மீனவர்கள் நலத்துறை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், நமக்கு ஒரு டிவி இல்லையே என்ற ஏக்கத்தைத் தமிழ் ஜனம் டிவி தீர்த்துவைத்துள்ளது. அந்த கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். வெளிநாடு சென்றாலும், அங்கு தமிழில் பேசுகிறார். ஐ.நா. சபையிலும் தமிழ் பேசி அதன் பெருமையை உலக அறிய செய்துள்ளார் என்றார்.
முன்னதாக, தமிழ் ஜனம் டிவியின் இலச்சினையை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அறிமுகம் செய்து வைத்தார், மேலும், தீம் பாடலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
விழாவுக்கு வருகை தந்தவர்களுக்குத் தமிழ் ஜனம் டிவியின் நிர்வாக ஆசிரியர் திரு. தில்லை நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்.