தமிழகத்தில் இதுவரை ரூ.208.41 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், பரிசுப்பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், பரிசுப் பொருட்கள் குறித்த தகவலை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை பறக்கும்படை சோதனையில், ரூ.208.41 கோடி பணம், தங்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதில், ரூ.99.38 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.4.53 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள், விலை உயர்ந்த பொருட்களும் அடங்கும். தாம்பரத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி குறித்து தேர்தல் சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 36.4 சதவீத பூத் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தாலும், ஜூன் 4-ஆம் தேதி வரை பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறினார்.