நாமக்கல் மாவட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாகன பேரணி மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியால் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்துள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வாகன பேரணியில் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் உரையாற்றிய அவர்,
உலக நாடுகள் மத்தியில் மோடியால் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. காங்கிரஸ் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது.
2014ம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இப்பொழுது 2024ல் 3வது இடத்தில் இருக்கிறோம். தற்போது 400 சீட் பெருவாரியாக பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணியாக இருக்கிறது. அதற்கு இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா கூட்டணி சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத் தான் சொல்லும். நம்முடைய வாக்குறுதிப்படி அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடித்துள்ளோம். அதேபோல ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவோம் என தெரிவித்திருந்தோம். அதன்படியே அந்த சட்டப்பிரிவை நீக்கி, தற்போது இந்தியாவின் ஒரு அங்கமாக ஜம்மு காஷ்மீரை கொண்டு வந்துள்ளோம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் எந்த மதத்தினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய நாட்டிற்கான பாதுகாப்புக்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மூன்று முறை தலாக் சொல்லும் முத்தலாக் சட்டத்தையும் ரத்து செய்துள்ளோம். இதன் மூலம் இஸ்லாமிய சகோதரிகள் பயனடைவர்.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு எந்த ஒரு பிரதமர் தலைமையிலும் நாடு முன்னேறவில்லை. ஆனால் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.
செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் மோடி. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைவரும் மோடியை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்வொரு உயர்ந்த தலைவருக்கும் இது போன்ற மதிப்பு கொடுத்ததே இல்லை. எந்த உத்தரவாதம் கொடுத்தாலும் நாங்கள் அதை நிறைவேற்றி இருக்கிறோம். நாம் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை. பாதுகாப்பு அமைச்சராக நான் கூறுகிறேன்.
யாருக்கும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. உறுதியாக நமது ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள் அனைத்தும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருந்தோம். தற்போது இறக்குமதி செய்வதில்லை. நாமே தயாரித்து நமக்கு நாட்டுக்கு தேவையான பாதுகாப்பு படி நாமே தயாரித்திருக்கிறோம்.
ஸ்வச் பாரத் மூலம் ஏழைகளுக்கு கழிவறை மற்றும் தரமான வீடுகளை கட்டிக் கொண்டுள்ளோம். சிறு வியப்பாரிகளுக்கு நல்லது செய்து கொண்டு தான் இருக்கிறோம். 2047ல் நாம் மிகப்பெரிய சக்தியான நாடாக உருவாகும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். திமுகவும், காங்கிரசும் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போது வரை மோடி அரசு மக்களுக்கு உழைத்துக் கொண்டு இருக்கிறது.
சூப்பர் பவராக இந்தியா மாறும் அதற்காக காத்துக் கொண்டிருங்கள். நமது வேட்பாளர் கே.பி ராமலிங்கம் வெற்றி பெற செய்வோம். ராமலிங்கம் நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி நமக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பார் என்றார்.
நாகப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங்,
திருவள்ளுவர் பிறந்த தமிழகத்தில் இருப்பது பெருமை அளிக்கிறது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் வாழ்ந்த தமிழகத்திற்கு வந்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடியால் உலகம் முழுவதும் தமிழ் கலாசாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐ.நா., சபையில் பேசும்போதும் தமிழில் பேசியவர் நமது பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியதன் மூலம் தமிழக கலாசாரத்திற்க மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். பனாரஸ் பல்கலையில் தமிழ் ஆய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.