அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, இன்று காலை 2-வது ராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக தென்கொரியா ஏவி உள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா அனுப்பியது. வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் தொடர்ந்து ராணுவ உளவு செயற்கைக்கோளை அனுப்புவது என திட்டமிட்டுள்ளது. அதன்படி தென்கொரியாவும் பரிசோதனையில் ஈடுபட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, இன்று காலை 2-வது ராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக தென்கொரியா ஏவி உள்ளது.
இதனை தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதன்படி, உளவு செயற்கைக்கோள் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த பின்னர், தரைப்பகுதியில் அமைந்த கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பும் கொண்டது என்று தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் ஏற்கனவே, பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த பரிசோதனை, பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.