இந்த ஆண்டு வசந்த நவராத்திரி ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி முடிவடைகிறது.
வசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் விரதம் கடைபிடித்து துர்க்கையை வழிபட்டால் குடும்பத்திற்கு அம்பிக்கையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
காலங் காலமாகவே, பாரத நாட்டுப் பண்பாட்டில் ஒரு கூறாக, ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வராஹி நவராத்திரி என்றும்,
புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் – சாரதா நவராத்திரி என்றும்,
தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி – சியாமளா நவராத்திரி என்றும், பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வசந்த நவராத்திரி என்று கொண்டாடப்படும் நவராத்திரி காலங்களில் அம்பிகையின் ஒன்பது வடிவங்களை தியானித்து ஆராதிப்பது, எல்லா செல்வங்களையும் நம் வாழ்வில் கொண்டுவந்து சேர்க்கும் என்பது சாஸ்திர வாக்கியம் .
இந்த நான்கு நவராத்திரிகளில் வசந்த நவராத்திரி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் வசந்த காலத்தை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த நவராத்திரி அமைகிறது .
பங்குனி மாத அமாவாசைக்குப் பின் பிரதமையில் தொடங்கும் இந்த வசந்த நவராத்திரியின் நிறைவு நாளில் தான் புத்தாண்டு பிறக்கிறது.
இந்த வசந்த நவராத்திரியின் 9ஆவது நாளில் தான் ஸ்ரீ இராமர் புண்ணிய அவதாரம் நிகழ்ந்தது. எனவே இந்த நவமி ஸ்ரீ இராம நவமி என்று வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது.
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீ இராம ஜென்ம பூமியில் ஸ்ரீபால ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்த பின் வருகிற மகா இராமநவமி என்பதால் , இந்த ஆண்டு வரும் ஸ்ரீ இராம நவமி மிகவும் முக்கியமானது .
அம்பிகைக்கு மிகவும் பிடித்தது எதுவென்று கேட்டால் ,பக்திச் சிரத்தையுடன் அடியவர்கள் செய்யும் பாராயணம் தான்.
`சப்த சதி’ என்று போற்றப் படும் ‘தேவி மகாத்மியம்’ 13 அத்தியாயங்களும் 700 ஸ்லோகங்களும் கொண்ட மகா மந்திர நூல் இது.
இந்த மந்திரங்களைப் படிப்பதால் எதை கேட்கிறோமோ அதை அம்பாள் தருவாள் என்பது அனுபவ உண்மை.
தமிழில் அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி நூலைப் பாராயணம் செய்வது சிறப்பு .
இன்றைய அவசர உலகில் இதெல்லாம் சாத்தியம் இல்லை , பாராயணம் செய்ய நேரமும் இல்லை என சொல்பவர்கள். அபிராமி அந்தாதியில் வரும் ‘வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே!, என்ற பாடல் அல்லது
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சகர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே
செயிர்அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே! என்ற பாடலையாவது
நாளும் பாராயணம் செய்து துர்க்கையிடம் நன்மைகளைக் கேட்டுப் பெறுவோம் வாழ்வில் ஜெயிப்போம்.