உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 16ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதாவது ராஜீவ் குமாரின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து தான் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் அவருடைய பாதுகாப்பு பணியில் 33 பேர் ஈடுபட உள்ளனர். இதில் சிஆர்பிஎப் காமாண்டோக்களும் அடங்குவார்கள். இதில் துப்பாக்கி ஏந்திய 10 வீரர்களும் அடங்குவார்கள்.
இந்த 33 பேரில் ஒரு பகுதியினர் ராஜீவ் குமாரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மற்றபடி 6 வீரர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 18 பேர் 3 ஷிப்டுகளில் ராஜீவ் குமாரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.