எல்லா உயிர்களின் நன்மைக்காகவும் பாரப்பட்சம் பார்க்காமல் அருள் புரியும் கண்ணுதல் கடவுளான சிவபெருமான், செய்த வீரச் செயல்கள் எட்டு என்று சைவசமய சாத்திரங்கள் மட்டுமின்றி தோத்திரங்களும் சொல்லுகின்றன. எட்டு புண்ணியத் தலங்களில் ஒன்றான திருக்கோவிலூர் திருத்தலமும் ஒன்று.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும் .
இறைவனிடமே வரம் பெற்ற ஆணவத்தால் உலக உயிர்களை எல்லாம் கொடுமைப் படுத்தி வந்த அந்தகாசுரன் என்னும் அசுரனை இறைவன் சம்ஹாரம் செய்து அருள் புரிந்தான் என்பது வரலாறு.
பார்வதி தேவி ஒரு முறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. அப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணின் மூலமாக உலகிற்கு ஒளி ஏற்படுத்தினார். சிவபெருமானின் கண்களை அம்மை மூடிய போது ஏற்பட்ட மொத்த இருளும் அந்தகாசுரன் என்ற அசுரனாக உருவானது.
அந்த அசுரன் தன்னுடைய தவவலிமையினால் பல வரங்கள் பெற்று தேவர்களையெல்லாம் வென்று தான் உருவாவதற்கு காரணமான ஈசனை வணங்கி மகிழாமல் தவறான சிந்தையுடன் பார்வதி தேவி இருக்கின்ற திருக்கயிலாய மலைக்கு போர் புரிய வந்தான்.
சலனம் இல்லாத மூர்த்தியாக இருக்கின்ற சிவபெருமான் அந்தகனை திருத்தவேண்டி, உடம்பெங்கும் திருநீறு பூசிய கங்காளராக பெருஞ்சினம் கொண்ட ஒரு வடிவம் எடுத்துத் தன்னுடைய சூலத்தினால் அந்தகனை வாட்டினார். சூலத்தில் குத்தப்பட்ட அந்தகன் அந்த சூலத்தில் இருந்தே சிவபெருமானை வழிபட்டு உய்வடைந்தான் என்பது வரலாறு. இந்த வீரச்செயல் நடந்த வீரத் தலமே திருக்கோவிலூர் வீரட்டானம் ஆகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களால் பாடப்பெற்ற இந்த திருத்தலத்தில் அம்மை அருள்மிகு சிவானந்த வல்லி உடனுறை வீரட்டேஸ்வரர் சுவாமி அருள் புரிகிறார்.
தல மூர்த்தியாக விளங்குகின்ற அந்தகாசுர சம்ஹார மூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்த திருமூர்த்தமாகும்.
அவ்வையார், சுந்தரமூர்த்தி நாயனார், கபில நாயனார், மெய்ப்பொருள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்கமுனையர், ராஜராஜ சோழன் போன்றோர் இத்தலத்து இறைவனை வணங்கி அருள் பெற்றுள்ளனர். சுக்கிரன் சாப விமோசனம் பெற்றதும் இங்கே தான்.
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பெருவிழாவின் ஆறாம் நாள் மாலையில் அந்தகன் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகின்றது. சித்திரையில் வசந்தோற்சவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது .
இந்த அட்ட வீரட்டத்து இறைவனை வணங்கினால் நம் வாழ்வில் எதிரிகள் தொல்லை நீங்கும். பில்லி சூனியம் என்று சொல்லப் படுகிற செய்வினை தோஷங்கள் அனைத்தும் நம்மை விட்டு போய்விடும். இறைவன் அருள் நிறைந்த தபோவனமாக குடும்பத்தில் எல்லா வளங்களும் வந்து நிறையும்.