மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 092 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7 ஆயிரத்து 154 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், பிற ஊர்களிலிருந்து வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், 3 ஆயிரத்து 60 சிறப்புப்
பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தேர்தல் முடிந்த பின்னர், சென்னைக்கு வரும் மக்களின் வசதிக்காக, வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 1,825 சிறப்புப் பேருந்துகளும், இரண்டு நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, 6 ஆயிரத்து 9 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2 ஆயிரத்து 295 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.