காங்கிரஸ் வானம், நிலம், நீர் என மூன்று உலகிலும் ஊழல் புரிந்திருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் 8 தொகுதிகளில் வரும் 19-ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ராம்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய ஜே.பி. நட்டா,
‘ஊழலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் ஊழல்வாதிகள் யாரும் தப்பமுடியாது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள். ஆனால், ஊழலைக் காக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கூட்டணி விரும்புகிறது.
நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைகற்றை ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் என மூன்று உலகிலும் காங்கிரஸ் ஊழல் புரிந்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மடிகணினி ஊழல், உணவு தானிய ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் ஊழல் புரிந்துள்ளனர். இத்தகைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணியானது ஊழல்வாதிகளின் கூட்டணி ஆகும்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திமுக அமைச்சர்கள் பிணையில் உள்ளனர். ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், கே.சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதா ஆகியோர் சிறையில் உள்ளனர்.
ஊழல்வாதிகளின் கூட்டணியான எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர்கள் சிறையிலோ அல்லது பிணையிலோ இருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் அராஜகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியலை ஆதரித்துப் பின்பற்றுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்து, ஊழலில் ஈடுபட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.
அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை பிரதமர் மோடி வழங்கியிருக்கிறார். நாட்டின் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து அவர் மீட்டுள்ளார்.
ஜாதி அடிப்படையில் மக்களை சிலர் பிளவுப்படுத்தும் வேளையில் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்களுக்கான பாதையில் பிரதமர் மோடி தொடர்ந்து பயணிப்பார்.
இந்தத் தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல். நாட்டின் இன்றைய அரசியல் களத்தை வாக்கு வங்கியின் அடிப்படையில் இல்லாமல் வளர்ச்சியை பாஜக முன்னிறுத்துகிறது. இவ்வாறு அரசியல் களத்தை பிரதமர் முற்றிலுமாக மாற்றியுள்ளார்.
ரௌடிகளின் ஆளுகையில் இருந்த உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நமது பெண் குழந்தைகள் அச்சமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். மாநிலத்தின் அனைத்து கிராமங்களுக்கு மின்சார வசதி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.