தமிழக – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கண்ணகி கோவிலில், வரும் 23-ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது.
தமிழக – கேரள எல்லை பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கி அமைந்துள்ளது.
‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்ற தத்துவத்தை மெய்ப்பிக்கும் வகையில், கற்பில் சிறந்த கண்ணகி தேவிக்கு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், சேரன் செங்குட்டுவனால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
இக்கோவிலுக்கு வந்து கண்ணகி தேவியை வழிபட்டால், தீர்க்க சுமங்கலியாக வாழலாம், கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் மீண்டும் ஒன்று சேரலாம் உள்ளிட்ட நம்பிக்கை உள்ளது.
ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தில் இக்கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். வருடத்தில் சித்திரை முழுநிலவு அதாவது சித்ரா பௌர்ணமி தினத்தில் மட்டுமே இங்கு வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அன்று மட்டும் காலை முதல் மாலை வரை நடை திறந்திருக்கும்.
அன்று மங்கலதேவி என்று அழைக்கப்படும் கண்ணகிக்கு அவல், பால், நெய், கற்கண்டு, வாழைப்பழம், பேரீட்சை, சர்க்கரை, ஏலம் ஆகியவை சேர்க்கப்பட்ட கலவை படைக்கப்படுகிறது. வழிபடும் பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி விழா வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி, வெகு தொலைவில் இருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இரு மாநில அதிகாரிகளும் அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.