இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது ஹாக்கி போட்டி இன்று பிற்பகல் 3.10 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடி வருகிறது.
இந்த போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு சோதனை போட்டியாக அமையும் வகையில் உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 6 ஆம் தேதியும், இரண்டாம் போட்டி ஏப்ரல் 7 ஆம் தேதியும் நடைபெற்றது.
இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தது. முதல் போட்டியில் இந்தியா 1-5 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் இந்தியா 2-4 என்ற கணக்கிலும் தோல்வியை அடைந்தது.
இதனால் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது போட்டி பெர்த்தில் இன்று நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களின் வேகமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அணியினர் திணறியதுடன், தடுப்பு ஆட்டத்திலும் கோட்டை விட்டனர்.
அந்த தவறுகளை சரி செய்து பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாக முயற்சி செய்யும். அதேபோல் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா ஆர்வம் காட்டும்.
எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.10 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.