உடன்பிறந்தவர்களுடன் உறவை கொண்டாடும் வகையிலும், போற்றும் வகையிலும் ஏப்ரல் 10 ஆம் தேதி தேசிய உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நம் உடன் பிறந்தவர்களுடன் நாம் எவ்வளவு சண்டையிட்டாலும், கோபமாக இருந்தாலும், அவர்களை சற்று பிரிந்து இருந்தால் நம் கண் முன் பாசம் தான் வரும், நாம் அவர்களை எவ்வளவு திட்டனாலும் மற்றவர்கள் முன் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ரத்த பாசம் தான் உடன் பிறந்த உறவு.
இத்தனை மகத்தான இந்த உறவை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 10 ஆம் தேதி உடன் பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ந்த தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவை சேர்ந்த கிளவுடா எவர்ட் தான். அமெரிக்காவின் மான்ஹட்டனை சேர்ந்தவரான கிளவுடா எவார்ட் என்பவர் தனது உடன்பிறப்புகளான அலன் மற்றும் லிசெட்டே ஆகியோரை வெவ்வேறு விபத்துகளில் இழந்துவிட்டார்.
அவர்கள் மீது அதீத பாசம் வைத்திருந்த கிளவுடா, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நாளை நிறுவினார். இதற்காக கடந்த 1995-ஆம் ஆண்டு உடன்பிறப்புகள் தின அறக்கட்டளையை கிளவுடா தொண்டு நிறுவனமாக நிறுவியதோடு மட்டுமல்லாமல் இந்த நாளை அங்கீகரிக்க அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை சந்தித்து இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.
அவரின் இந்த முயற்சியின் பலனாக அமெரிக்காவின் 49 மாகாண ஆளுநர்கள், அதிபர்கள் புஷ், ஒபாமா, கிளிண்டன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் இதனை ஆமோதித்தனர்.
இதன் பின்னரே உடன் பிறப்புகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே கிளவுடாவின் ஆசையாக இருந்தது. அது ஆரம்பத்தில் நடக்காவிட்டாலும், தற்போது இந்த உடன்பிறப்புகள் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை உடனிருக்கும் ஒரே உறவு உடன்பிறப்புகள் தான். அத்தகைய உறவை போற்றும் தினமான இன்று உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது.