காஸாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி, அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என்றும், உலகின் எந்த சக்தியாலும் இதனை தடுக்க முடியாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
காஸாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து, தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தி உள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக கருதப்படும், ரபா நகரை கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி, அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது, ஹமாஸ் உடனான போரில் வெற்றிப்பெறுவதற்கு, ரபா நகரை கட்டுப்பாட்டில் எடுப்பது அவசியம். உலகில் எந்த சக்தியாலும் எங்களை தடுக்க முடியாது. எங்களை தடுக்க பலர் முயற்சி செய்கின்றனர். ஆனால், அது உதவாது என்று கூறினார்.