மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டம், நெவாசா கிராமத்தில் பாழடைந்த ஒரு கிணறு உள்ளது. அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார்கள் கூறினர்.
இப்படிப்பட்ட இந்த கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்துள்ளது. அந்த பூனையை காப்பாற்ற இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.
அப்போது அவரின் கால் கிணற்றில் இருந்த சேற்றில் சிக்கிக்கொண்டது. பின்னர் அவரை மீட்பதற்க்காக மேலும் 5 பேர் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் இறங்கி சிக்கிக்கொண்டனர்.
பின்னர் கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனே மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
உறிஞ்சும் பம்புகள் கொண்டு மீட்பு படையினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 நபர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
உயிருடன் மீட்கப்பட்ட விஜய் மாணிக் ( 35 ) அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல் நலம் சீராகி இருப்பதாக காவல் துறையினர் தகவல் அளித்துள்ளார்.
மேலும் அந்த கிணற்றில் உள்ள கழிவு பொருட்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. அதேபோல் அங்கு 5 அம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது.