அரக்கோணத்தில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது.
அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் ஜெகத்ரட்சகன். இவரை கோடீஸ்வர வேட்பாளர் என பலரும் அழைக்கின்றனர். காரணம், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பல கோடி ரூபாய் சொத்து மதிப்பு காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அப்போது, அங்கு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர், வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். கையில் கொண்டு வந்திருந்த உருட்டுக்கட்டைகளால் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால், வாகனத்தில் பிரச்சாரம் செய்தவர்கள் தலைதெறிக்க ஓட்டம் எடுத்தனர்.
இதில், நகர காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விமல் ஆகியோர், அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களை அந்த கும்பல் அடைத்து உதைத்தது. இதில், அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக வேட்பாளரிடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ததால், இருதரப்பு இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.